மதுரை: மதுரையில் நேற்று மீனாட்சியம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாய்க்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இறந்த மூதாட்டியின் உடலை மாநகராட்சி ஆணையாளர் விசாகனின் உத்தரவின்படியும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய விதிமுறைகளின்படியும் தத்தனேரி இடுகாட்டில் பாதுகாப்பாக தகனம் செய்தனர்.
மதுரையில் இவருடன் சேர்த்து இதுவரை இக்கிருமி தாக்குதலால் இருவர் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு முதலே மதுரை மாநகராட்சிப் பகுதியில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல போலிசார் தடை விதித்துள்ளனர்.
இதுவரை நோய்த் தொற்று கண்டறிப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே போலிசார் 'சீல்' வைத்து மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேறாமல் கண்காணித்து வந்தனர்.
ஆனால், நேற்று முதல் ஒட்டுமொத்த மதுரை மாநகருக்கும் போலிசார் 'சீல்' வைத்து பைக், கார்களில் மக்கள் வந்தால் அவர் களது வாகனங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
பால், காய்கறி, மளிகைப்பொருட்கள் வாங்குவதற்கு வாகனங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளதோடு அவரவர் பகுதியிலே நடந்து சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ள மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.
பட்டரின் தாய் இறந்ததையடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஊழியர்கள், கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலிசார், பட்டரின் குடுபத்தினர் 200 பேருக்கு கொரோனா கிருமி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை அதன் முடிவுகள் வரவில்லை. அதன் முடிவுகள் என்னவாக இருக்குமோ என்றும் சமூக பரவலாகிவிடுமோ என்றும் மாவட்ட நிர்வாகத்தினர், மாநகராட்சி நிர்வாகத்தினர், சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோர் கலக்கத்தில் உள்ளனர்.

