திருச்சி: தனது தோளுக்கு மேல் வளர்ந்து ஆளாகியுள்ள மகள்களைப் பற்றி சற்றும் நினைத்துப் பார்க்காத தாய் ஒருவர், தனது குடும்பத்துக்கு அவப்பெயர் எதுவும் வந்து விடக்கூடாது என்ற பயத்திலேயே இரு மகள்களையும் கொன்றதாக காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி கனகராஜ். இவரது மனைவி சாந்த மீனா, 40. இவர்களுக்கு லோகநாதன் (15) என்ற மகனும் கோகிலா (13), லலிதா (11) என்ற இரு மகள்களும் உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்றிருந்த நிலையில், சாந்தமீனாவின் மகள்கள் இருவரும் மயக்கமடைந்து விழ அவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமிகள் இருவரும் உயிரிழந்ததை அடுத்து மணப்பாறை காவல்நிலையத்தில் சாந்தமீனா சரணடைந்தார்.
"கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், எனது கணவரின் சகோதரர் வைத்திருக்கும் பணம் அவ்வப்போது காணாமல் போனது. அதனை எனது மகள்கள்தான் எடுத்தனர். அவற்றால் எனது குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தால் மகள்களை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்றுவிட்டேன்," என கைதான சாந்தமீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

