சென்னை: தமிழகத்தில் சென்னை யில் வசிக்கும் மக்கள்தான் கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடையை மீறி தேவையின்றி ஊருக்குள் வலம் வரும் சிலரால் இந்நோய்ப் பரவல் தீவிரம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை நகர காவல்துறையினர் முக்கிய தேவை யின்றி ஊர் சுற்றும் இளையர் களுக்கு 'டம்ளர் நீர்' எனும் நூதனத் தண்டனையை மீண்டும் வழங்கி அவர்களை கலங்கடித்து உள்ளனர்.
புதுவண்ணாரப்பேட்டையில் கொரோனா சிகை அலங்காரத்துடன் அவசியமின்றி வலம் வந்த இளையர்களை மடக்கிப் பிடித்த துணை காவல் ஆணையர் சுப்பு லட்சுமி, ஒரு குவளையில் இருந்து மற்றொரு குவளையில் 'ஸ்பூன்' மூலம் நீரை நிரப்பும் நூதன தண்டனையை வழங்கினார்.
"வீட்டிலிருந்து இனி வெளியே வர மாட்டோம்," என கூறியபடியே இளைஞர்கள் குவளையில் நீரை நிரப்பினர். இன்னும் சில இடங்களில், சாலையில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் வைக்கப்பட்ட குவளையில் ஸ்பூன் மூலம் இளையர்களைத் தண்ணீரை நிரப்ப வைத்து மனம் வருந்த வைத்தனர்.
சிலரை நடுவீதியில் தோப்புக்கர ணம் போடவைத்து விரட்டிவிட்டனர்.
ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பூக்கடை, மண்ணடி, எண்ணூர் மாதாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊர் சுற்றி சிக்கியவர்கள் ஒற்றைக் காலில் தவம் செய்தனர். சிலர் கொரோனா விழிப்புணர்வு பொம்மை யிடம் ஊரடங்கை மீறியதற்காக மன்னிப்பு கேட்டுச் சென்றனர்.

