சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிருமி எதிர்ப்பு போரில் வெற்றி தலைகாட்டுகிறது என்பதற்கான சிறுசிறு அறிகுறிகள் தெரிய வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அந்த மாநிலத்தின் 13 மாவட்டங்களில் பல நாட்களாக புதிதாக ஒருவரைக் கூட கொரோனா கிருமி தொற்றவில்லை.
இது ஒருபுறம் இருக்க, மாநிலம் முழுவதும் புதிதாக கிருமி தொற்றுவோரின் எண்ணிக்கையைவிட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
அரசாங்கம் அமல்படுத்தி இருக்கும் ஊரடங்கு, 144 தடை உத்தரவுகள் பலனளிக்கத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இருந்தாலும், இந்தப் போராட்டத்தில் வெற்றி கிட்டுகிறது என்பதை அதற்குள்ளாக கூறிவிட முடியாது என்று வல்லுநர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.
நீலகிரி, கன்னியாகுமரி, ஈரோடு, தேனி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் புதிய தொற்றுகள் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் கடந்த ஐந்து நாட்கள் முதல் 15 நாட்கள் வரை புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்பதால் கிருமித்தொற்று விகிதம் குறைந்து வருவது போல் தெரிவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார்.
ஆனால் மாநிலத்தில் அன்றாடம் நடத்தப்படும் 6,500 பரிசோதனைகள் போதாது என்றும் இப்போதைய நிலவரங்களை வைத்து ஒரு முடிவுக்கு நாம் வரமுடியாது என்றும் சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,020 ஆக உயர்ந்து இருக்கிறது. அதேநேரத்தில் 865 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் கோயம்புத்தூர் முதல்இடத்தை வகிக்கிறது. மாநிலத்திலேயே கொரோனா கிருமித்தொற்று நோயாளிகள் வேகமாகக் குணமடைந்து வரும் மாவட்டம் என்ற பெருமையை கோயம்புத்தூர் பெற்று இருக்கிறது.
அங்கு மொத்தம் 141 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 116 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். எஞ்சிய 25 பேரும் விரைவில் குணமடைந்துவிடுவார்கள் என்று கோவை ஆட்சியர் தெரிவித்தார்.
மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்தும் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில், மத்திய அரசாங்கம் அனுப்பி இருக்கும் ஐந்து பேரைக் கொண்ட நிலவரம் அறியும் குழு, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் குறிப்பாக சென்னையின் பல இடங்களுக்கும் சென்று நேரடி ஆய்வு நடத்தி வருகிறது.
மாாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 55 விழுக்காடாக அதிகரித்து இருப்பதை மத்திய குழுவினர் பாராட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் காணப்படும் உற்சாக நிலவரம் நீடித்து மேம்படும் பட்சத்தில் கிருமி தொற்றுவோரின் எண்ணிக்கை இன்னும் குறையும் என்றும் குணமடைவோர் அளவு கூடும் என்றும் நம்பப்படுகிறது.

