அசைவ விருந்து நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

அசைவ விருந்து நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

1 mins read
d620a25f-0892-41ee-93f2-e652b15e5f4c
படம்: ஊடகம் -

தஞ்சாவூர்: ஊரடங்கு வேளையிலும் இளையர்கள் சிலர் அசைவ விருந்து நிகழ்வுகளை நடத்தி வருவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சென்னம்பட்டியில் இந்த விருந்து நிகழ்வுகளை சிலர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இளையர்கள், சிறுவர்கள் என குறைந்தது 70 பேராவது கலந்துகொள்ளும் இந்த அசைவ விருந்து நிகழ்ச்சியில் அளவில் பெரிய வாழை இலை வைக்கப்பட்டு, அதில் பல்வேறு வகையான உணவு வகைகளைப் பரிமாறுகின்றனர்.

விருந்துக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அருகருகே அமர்ந்து உணவு உட்கொள்கின்றனர்.

இதுதொடர்பான காணொளிப் பதிவும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் கடந்த இரு தினங்களாக வேகமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து அப்பகுதி போலிசார் விருந்து நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக சிலர் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் தஞ்சை மாவட்டம் தியாகசமுத்திரம் பகுதியிலும் கபிஸ்தலம் அருகே உள்ள கொள்ளிடக்கரையிலும் சிலர் அண்மையில் அசைவ விருந்து நிகழ்வை நடத்தினர்.

இதையடுத்து போலிசார் அவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தகவல்.

கிராமப்புறங்களில் கொரோனா கொண்டாட்டம் என்ற பெயரில் இவ்வாறு விருந்து நிகழ்வுகளை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

விருந்து நிகழ்வில் அருகருகே அமர்ந்து உணவருந்தும் இளையர்கள். படம்: ஊடகம்