சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கொரோனா கிருமித்தொற்று நாள்தோறும் கூடி வருவதால் தமிழக அரசு 500 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.
கிருமித்தொற்று அதிகம் உள்ள வட்டாரங்களில் வீடு வீடாகச் சென்று அந்தக் குழுவினர் எல்லாருக்கும் கிருமி பரிசோதனை நடத்துகிறார்கள்.
வீடுதோறும் முகக்கவசம், கை கழுவும் திரவம், நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் மாத்திரை, மருந்துகள் பலவற்றை யும் அவர்கள் கொடுத்துவருகிறார்கள்.
அந்தக் குழுவினரில் கழிவுநீர் பரிசோதனைத் துறை அதிகாரிகள் 120 பேர் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஒவ்வொரு அதிகாரிகளிடமும் கையடக்கப் பரிசோதனைச் சாதனங்கள் இருக்கின்றன என்றும் யாருக்காவது கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தால் உடனடியாக அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 13,191 பேரைக் கிருமி தொற்றி இருந்தது. 5,882 பேர் இதுவரை குணமடைந்து இருக்கிறார்கள். 87 பேர் மரணமடைந்துவிட்டனர்.
சென்னையில் மட்டும் 8,228 பேரைக் கிருமி தொற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிதாகக் கிருமி தொற்றியோரில் 83 பேர் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்கள்.
சென்னையில் ராயபுரம் கொரோனா புரமாக மாறிவிட்டது. அங்கு 1,538 பேரைக் கிருமி தொற்றி உள்ளது. கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் அடங்கும்.
சென்னையில் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் ஆண்கள். 40 விழுக்காட்டினர் பெண்கள். திருநங்கைகள் மூன்று பேரும் கிருமித் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 59 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
மாநிலத்தில் கிருமி தொற்றி இருப்போரில் 62.3 விழுக்காட்டினர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மரணம் அடைந்தவர்களில் 67.8% சென்னையைச் சேர்ந்தவர்கள்.
சென்னையில் கடந்த 14 நாட்களாக புதிய தொற்று எதுவும் இல்லாத 379 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னை நீங்கலாக இதர பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வேளையில், சென்னையில் அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிய திருநெல்வேலியிலிருந்து 200 தொழிலாளர்கள் சிறப்புப் பேருந்துகளில் நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.

