தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் குரல்வளையை நெரிப்பதுபோல் கொரோனா கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15,000ஐ கடந்து இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நேற்று ஒரே நாளில் 508 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,512. உயிரிழப்பு 103.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கிருமிப் பரவல் ஒடுங்கிவிட்ட நிலையில், சென்னையில்பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆகி உள்ளது. உயிரிழப்பு 72 ஆகியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக ஏற்பட்ட கிருமி பரவலால் நாள்தோறும் கிருமித்தொற்று புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதிக பாதிப்புள்ள பகுதியாக ராயபுரம் மண்டலம் உள்ளது. அங்கு 1,889 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தமிழகத்தின் முக்கிய அரசு, தனியார் அலுவலகங்கள் அனைத்தும் சென்னையில் இருக்கின்றன. கட்டுப்பாடுகள் காரணமாக சென்னைவாசிகள் வெளியே செல்ல முடியவில்லை, மற்ற ஊர்க்காரர்கள் சென்னை வர முடியவில்லை. இதனால் மாநிலத்தில் வழக்க நிலைமை திரும்புவது மிகவும் தாமதமடையும் போல் தெரிகிறது.
நாடளவில் அதிகரிக்கும் பாதிப்பு
இந்தியாவில் கிருமித்தொற்று அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் அங்கு கிருமித்தொற்றும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நாடு முழுவதும் கிருமித் தாக்குதலுக்கு நேற்று முன்தினம் மட்டும் 147 பேர் பலியாகியுள்ளனர்.
குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லியில் பாதிப்பு அளவு அதிகமாக உள்ளது. நேற்று காலை நிலவரத்தின்படி ஒரே நாளில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131,868 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 54,440 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,867 ஆக உயர்ந்துள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விரிவான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் நிதி ஆயோக் உறுப்பினரும், கொரோனா கட்டுப்பாட்டு குழு தலைவருமான டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு என்று பிரத்தியேகமாக சிகிச்சை அளிப்பதற்கு 1093 மருத்துவமனைகள் செயல்படுகின்றன. 2,402 சுகாதார மையங்களும், 7,013 கொரோனா நோயாளிகள் கவனிப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் மொத்தமாக 9,74,000 படுக்கைகள் இருக்கின்றன என்றார் அவர்.
அத்துடன், கிருமி தொற்றியவர்களில் ஐந்து விழுக்காட்டினருக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் 80 விழுக்காட்டினருக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே சிகிச்சை போதுமானதாக உள்ளது. நோயாளிகள் குணமாகும் விகிதம் 41% என்றும் அவர் சுட்டினார்.
இதற்கிடையே, கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாநிலங்களுக்கு இடையிலான விமானம், ரயில், பேருந்து பயணங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயணிகள் 'ஆரோக்கிய சேது' கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் போன்றவற்றுடன் பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து மாநிலங்கள் சொந்த நெறிமுறையை உருவாக்கிக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

