சென்னை: தற்போது சென்னையில் மட்டும் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர் என்றும் மாநகரின் மத்திய மண்டலங்களில் மட்டுமே கிருமித்தொற்று பாதிப்பு உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால்தான் சென்னையில் நோய்த்தொற்று அதிகரித்தது என செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் கிருமித்தொற்று அதிகமுள்ள ராயபுரம் மண்டலத்தில் பொது மக்களுக்கு 30 ஆட்டோக்கள் வாயிலாக கபசுரக் குடிநீர், மூலிகை தேநீர் வழங்கும் திட்டத்தை அவர் நேற்று முன்தினம் வேப்பிலை கொத்து அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், சென்னையில் மண்டல வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.
"சென்னையில் 1 சதுர கிலோ மீட்டரில் 5,500 முதல் 6 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். ஆனால், கிராமங்களில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 600 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
"மக்கள் அடர்த்தி காரணமாக கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலானதாக உள்ளது. சென்னை குடிசைப் பகுதிகளில் இதுவரை 16 லட்சம் மறு பயன்பாட்டுடன் கூடிய முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன," என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
போலியோ, சிக்குன் குனியா, டெங்கி, அம்மை போன்ற பல்வேறு நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டது போல் கொரோனா கிருமித்தொற்றும் கட்டுப்படுத்தப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், சென்னையில் 28 நாட்கள் தொற்று ஏற்படாத 64 தெருக்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 356 தெருக்கள் மட்டுமே கட்டுப்பாட்டு தெருக்களாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

