'தமிழ் இருக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை'

'தமிழ் இருக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை'

2 mins read
1c940ba2-01d0-41d5-9fdf-8a5e801b4794
வருங்காலத் தலைமுறையினருக்கு தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம் என்று திரு சந்திரசேகரன் கூறியுள்ளார். படம்: இந்திய ஊடகம் -

சென்னை: தமிழ் இருக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செம்மொழி தமிழாய்வு இயக்குனர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் இடம் காலியாகவே இருந்தது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஆர். சந்திர சேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஈரோட்டில் மூலப்பாளையம் நேதாஜிநகரில் உள்ள வீட்டில் இருந்து திரு சந்திர சேகரன் பேட்டியளித்தார்.

"தமிழக முதல்வர் தலைமையில் செயல்பட்டு வரும் அமைப்பிற்கு இயக்குநராக பொறுப்பு ஏற்றிருப்பது பெருமை அளிக்கக் கூடியதாக உள்ளது.

"உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவேன்.

"மேலும் தமிழ்மொழியில் தொய்வு ஏற்பட்டுள்ள ஆய்வுகளை மேம்படுத்துவதற்கு அதிக நிதிகளைப் பெற்றுத் தந்து தமிழ்ப்பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்த முயற்சி எடுப்பேன்," என்று அவர் கூறினார்.

"உலகம் முழுவதும் தமிழ்வழி கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தி உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் வருங்காலத் தலைமுறையினருக்கு தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்," என்றார் அவர்.

பேராசிரியர் சந்திரசேகரன், தமிழ்ச்சங்கம், பழங்குடிகள், சங்ககால இலக்கியத்தில் தமிழ் மொழி என பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் கடந்த 2019 இந்திய அதிபரின் விருதுகளைப் பெற்றுள்ளதுடன், தேசிய மற்றும் மாநில அளவில் தமிழ் மொழியில் சிறந்து பணி யாற்றியதற்காக விருதுகளைப் பெற்றுள்ளார்.

அதேபோல் இந்தியா உள்பட வெளிநாடுகளில் தமிழ் மொழி குறித்த சிறப்புச் சொற்பொழிவுகளையும் ஆற்றி தமிழ்மொழிக்குப்பெருமை சேர்த்துள்ளார்.