தமிழகம்: நாட்பட்ட நோயாளிகளை கொரோனா தொற்றுவது அதிகரிப்பு

தமிழகம்: நாட்பட்ட நோயாளிகளை கொரோனா தொற்றுவது அதிகரிப்பு

2 mins read
29d8a785-a906-4c13-b394-d28e508e703f
சென்னையில் உள்ள தற்காலிக சந்தையில் மக்கள் பாதுகாப்பு இடைவெளியுடன் காத்திருந்து காய்கறிகள் வாங்குகின்றனர். படம்: ஏஎப்பி -

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆறாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொவிட்-19 கிருமி தொற்றி இருக்கிறது.

நேற்று முன்தினம் 1,438 பேரை கொரோனா கிருமி தொற்றியது. அவர்களில் 1,116 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, மொத்த பாதிப்பு 28,694ஆக அதிகரித்தது.

சென்னையில் மூவர் உட்பட மேலும் 12 பேர் கிருமித்தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதையடுத்து, மரண எண்ணிக்கை 232ஆக உயர்ந்தது.

கிருமித்தொற்றுப் பாதிப்பு விகிதம் அதிகரித்து வரும் நிலையில், முதியவர்களே அதிகம் பாதிக்கப்படுவது மருத்துவர்களைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

"நாட்பட்ட நோய்கள், உறுப்பு செயலிழப்பு போன்ற பிரச்சினைகளும் அவர்களுக்கு இருக்கும்போது நிலைமை மேலும் சிக்கலாகி விடுகிறது," என்றார் அப்போலோ மருத்துவமனையின் நோய்த்தொற்றியல் நிபுணர் டாக்டர் வி.ராமசுப்பிரமணியன்.

கிருமித்தொற்றால் நேற்று முன்தினம் மரணமடைந்த 12 பேரில் எட்டுப் பேர் 80 வயதைக் கடந்தவர்கள். அவர்களில் இருவர் சிறுநீரகக் கோளாற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது.

அதேபோல, கிருமித்தொற்றால் இம்மாதத்தில் இதுவரை பதிவான 43 மரணங்களில் ஒன்பது பேர் சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

"டயாலிசிஸ் சிகிச்சைக்கு வருவோரில் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது," என்று மூத்த சிறுநீரக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு இருந்த 50 வயதுப் பெண் ஒருவரைக் கிருமி தொற்ற, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அதிகாலை 3.17 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், 3.55 மணிக்கே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

தேறுவோர் விகிதமும் அதிகம்

இதனிடையே, மகாராஷ்டிராவை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2வது மாநிலமாக தமிழகம் அறியப்பட்டாலும் அதிலிருந்து குணமடைவோர் விகிதமும் அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 15,762 பேர், அதாவது 55 விழுக்காட்டினர் தொற்றிலிருந்து தேறிவிட்டனர். அத்துடன், உயிரிழப்பு விகிதமும் 0.81% என்ற அளவிலேயே உள்ளது.

பாதிப்பின் தீவிரத்தைக் கண்டறிவதில் இருந்து சிகிச்சை அளிப்பது வரை, தமிழகத்தில் எல்லா மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

"தீவிரப் பரிசோதனை, முன் கூட்டியே பாதிப்பைக் கண்டறிதல், தீவிர நோயாளி நிர்வாகம் ஆகியவையே இந்த வெற்றிக்குக் காரணங்கள்," என்றார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டாக்டர் எஸ் ரகுநாதன்.