சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பரவி வரும் கொரோனா கிருமித் தொற்றின் அளவே தொடர்ந்தும் நீடித்து வந்தால், அடுத்த ஜூலை மாதம் 15ஆம் தேதிக்குள் 3.3 லட்சம் பேரை இத்தொற்று பீடிக்கும் நிலை உள்ளதாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் வழி அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆகும். இதில் சென்னையில் மட்டும் 19,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 69.09% மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், நோய்ப் பரவியல் துறை தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட நிபுணர்கள் கொண்ட குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களுக்கு கொரோனா தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதுதான் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் முக்கிய அம்சமாகும்.
இப்போதுள்ள நிலை நீடித்தால் ஜூலை மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இதில் சென்னையில் மட்டும் 1.50 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை தமிழகம் முழுவதும் 1,949ஆகவும் சென்னையில் 1,654 ஆகவும் இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அதன் பிறகுதான் அதன் பாதிப்பு என்பது படிப்படியாகக் குறையும்.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

