சென்னை: கொரோனா கிருமிப் பரவலைத் துடைத்தொழிக்க மக்கள் சக்தியால்தான் முடியும் என்று கொரோனா கிருமித் தடுப்புக்கான சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
"இந்தப் பணியில் ஓரிருவர் இறங்கினால் போதாது. ஒரு மக்கள் இயக்கமே இறங்கினால்தான் கிருமித் தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தமுடியும்," என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கிருமிப் பரவலைத் தடுப்பது சாத்தியமாகாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளார்.
"வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன் தனிமனித இடை வெளியையும் பின்பற்றவேண்டும்," என்று அவர் வலியறுத்தியுள்ளார்.
இதற்கிடையே சென்னை, தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆய்வு நடத்திய ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொதுமக்கள் முகக்கவசம் அணி வதை தேசிய கடமையாக உணரவேண்டும்.
"சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 1,000 பேர் வீதம் அதிகரித்து வருவதைக் கண்டு மக்கள் பீதி அடையவேண்டாம்.
"சென்னையில் 39,000 தெருக் கள் உள்ளன. அவற்றில் 6,000 தெருக்களில் அதாவது 16.53% தெருக்களில் மட்டுமே நோய்த்தொற்று பரவி வருகிறது. தொற்று பரவியவர்களைத் தனிமைப்படுத்தி தொற்று பரவாமல் தடுக்கிறோம்.
"கிருமியைக் கட்டுப்படுத்த மக்கள் இயக்கம் களமிறங்கவேண்டும்," என்று கூறினார்.
தற்போது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் தான் அதிக அளவில் கிருமித் தொற்று பாதிப்பு காணப்படுகிறது.
நேற்று ஞாயிறு காலை நிலவரப்படி, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,993ஆக உயா்ந்திருந்தது. ராயபுரம் மண்டலத்தில் 3,717க்கும் மேற்பட்டோா் இக்கிருமியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கொத்தவால் சாவடி சந்தையை நேற்றுமுதல் ஒருவாரத் துக்கு மூடுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்தது.
சென்னையில் கிருமி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை யில், ராயபுரத்தில் உள்ள கொத்தவால் சாவடி சந்தையை ஒருவாரம் மூடுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்தது. படம்: ஊடகம்

