சென்னை: தமிழகத்தில் இன்று 8ஆம்தேதி முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடவும் கடைகள், வணிக நிறுவனங்களைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களைத் தங்களது கடைகள், வணிக நிறுவனங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் கடை உரிமையாளர்களும் ஊழியர்களும் முகக்கவசங்கள், கையுறைகளை அணிந்திருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உணவகங்களில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், சாப்பிடும் மேசைக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும், குளிர்சாதன வசதியைத் தவிர்த்து, சன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் உணவகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உணவகங்களில் பழைய விலைகளே தொடரும் என்றும் உணவு விலை உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமையல் அறைகளில் பணியாற்றுவோர் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்யவும் கைகழுவும் இடங்கள், கடைகளின் பிற பகுதிகளில் எச்சில் உமிழக் கூடாது என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

