சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக 'கொவிட் 19' தொற்றில் இருந்து குண மடைந்த ஆடவர் ஒருவருக்கு மீண்டும் அத்தொற்று பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி இக்கிருமியால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த மே 3ஆம் தேதி இத்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் அந்த இளைஞருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து அவர் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றார். அங்கு அவருக்கு குடல்வால் அழற்சி நோய் இருப்பது உறுதியானது. அத்துடன் கொரோனா கிருமித்தொற்றும் இருப்பது உறுதியானதால் மருத்துவர்கள் இளைஞருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, இளை ஞருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கிருமித்தொற்று, குடல்வால் அழற்சிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

