சென்னையில் கொரோனா கிருமித்தொற்று அதிகரிக்கும் வேளையில் தமிழக அரசு நான்கு தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக கையகப்படுத்தவுள்ளது. பெசன்ட் நகர், வளசரவாகம், அரும்பாக்கம் மற்றும் சென்னை துறைமுகத்திலுள்ள அந்த மருத்துவமனைகள் முழுமையாக கொரோனா தொடர்பான சிகிச்சைகளை அளிக்கும் மருத்துவமனைகளாகச் செயல்படும்.
இதற்காக 1500 மருத்துவர்கள், 600 தாதியர்கள், 350 ஆய்வக பணியாளர்கள் ஆகியோர் பணிக்கு நியமிக்கப்பட்டனர்.
சென்னையில் 1 லட்சத்து 21950 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 22,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
எனவே 7 நாட்கள் வட சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகள், பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகுதான், வடசென்னையில் கொரோனா தொற்று பலமடங்கு அதிகரித்துள்ளது. கடைவீதிகள், சந்தைகளில் சமூக விலகல், முகக்கவசம் போன்ற விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்பது அதிகாரிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

