சென்னை: கடந்த இரண்டு மாதங்களாக ஒரு காட்டாற்று வெள்ளத்தைக் கடப்பது போல, மிகவும் இக்கட்டான காலச் சூழ்நிலையை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கடந்து வந்திருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றானது இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளதாக கடிதம் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக பரவல் என்ற நிலைக்கு ஒருபோதும் தமிழ்நாடு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகத் தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும் 'விலகி இருங்கள், விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள்' என்று தாம் விடுத்த கனிவான வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
"கூட்டு முயற்சியினால் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து இல்லம் திரும்புவோரின் சதவீதம் இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம். உயிர் இழப்போரின் சதவீதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவு. இதற்காக இன்று மருத்துவ வல்லுநர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், நடுநிலையாளர்கள், எல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டை பாராட்டி வருகிறார்கள்," என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

