சென்னை: கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக அரசு எதையும் மூடி மறைக்கவில்லை. அப்படி எதையும் எளிதில் மறைத்துவிடவும் முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"எல்லாவற்றிலும் நாங்கள் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி வெளிப்படைத் தன்மையுடன் தான் நடந்து வருகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் 'கொவிட்-19' கிருமித்தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, சென்னையில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் கூறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதையடுத்து, சேலத்தில் ரூ.441 கோடி செலவில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்து பழனிசாமி நேற்று விளக்கம் அளித்தார்.
"தமிழகத்தில் கிருமித்தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கொரோனா தொடர்பான விவரங்களை வெளிப்படையாக வெளியிட்டு வருகிறோம்," என்றார்.
இதற்கிடையே, மருத்துவமனைகளில் கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவா்கள், தாதியா்கள், மருத்துவப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக மேலும் 1,239 மருத்துவா்களை பணியமா்த்தி உள்ளதாக சுகாதார அமைச்சா் சி.விஜயபாஸ்கா் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
'கொவிட்- 19' கிருமித்தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை அரசு எதையும் மறைக்கவில்லை. மறைக்கவும் முடியாது. வெளிப்படைத் தன்மையையே பின்பற்றுகிறோம்.

