ஜெ. அன்பழகன் பதவிக்கு திமுகவில் போட்டி

ஜெ. அன்பழகன் பதவிக்கு திமுகவில் போட்டி

2 mins read
f1939ff3-5447-46c5-ae16-f076df3c47b5
-

சென்னை: அண்மையில் மரண மடைந்த திமுகவைச் சேர்ந்த ஜெ. அன்பழகன் வகித்துவந்த மாவட்ட செயலாளர் பதவியைக் கைப்பற்ற திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. திரு அன்பழகனின் மறைவையொட்டி திமுகவில் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவரது பதவியை கைப்பற்ற ஐந்து பேர் முயற்சி செய்து வருகின்றனர் என்று அறிவாலய வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம், சேப்பாக்கம் பகுதி செயலர் மதன்மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், முன்னாள் எம்எல்ஏ கலைராஜன், மாணவரணி துணைச் செயலர் மோகன் ஆகியோர் மல்லுக் கட்ட தயாராகி வருகின்றனர். இதில் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தனசேகரன், மேற்கு மாவட்ட செயலர் பதவியைக் கைப்பற்ற வியூகம் வகுத்து செயல் பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒன்றுபட்ட தென்சென்னை மாவட்டமாக இருந்தபோது கிட்டு மாவட்ட செயலாளராக இருந்தார். அவர் இறந்ததும் அப்பதவி தனசேகரனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜெ. அன்பழகனுக்கு அந்தப் பதவி கிடைத்தது. அப்போதே கிடைக்காத பதவி இப்போது கிடைக்குமா என்று தனசேகரன் எதிர்பார்க்கிறார். சேப்பாக்கம் பகுதி திமுக செயலராக இருப்பவர் மதன்மோகன். இவர்தான் ஜெ. அன்பழகனுடன் இணைந்து பணியாற்றியவர். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி பணிகளை கவனித்து வந்தவர்.

மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தை தினமும் அலங்கரிக்கும் பணியில் எம்எல்ஏ சேகர் பாபுவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், மாநகராட்சி அனுமதி இல்லாமல் ஜெயலலிதா சிலை வைக்க அதிமுகவினர் முயன்றபோது, மக்களை திரட்டி தடுத்து நிறுத்தியதற்காக தலைமையின் பாராட்டை பெற்றவர்.

மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் முழு ஆதரவு இருப்பதால் மதன்மோகன் நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறார். திமுக மாணவரணியில் 15 ஆண்டுகளாக துணை அமைப் பாளர் பதவி வகித்து வரும் மோகன், கோடம்பாக்கத்தில் வசித்து வருவதால் அவரும் மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார்.

அமமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கலைராஜனும் மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.