சென்னை: சென்னையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்ற தகவல் தவறானது. அரசுக்கு அத்தகைய நோக்கம் எதுவும் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"பொய்யான வதந்தியைப் பரப்பு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறந்துவிட்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர். அப்போது, "இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முதல்வர், "சென்னையில் ஊரடங்கு உத்த ரவை மீண்டும் நீட்டிக்கும் எண்ணம் இல்லை. அந்தச் செய்தியை வெளியிட்டவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
"சுமார் 87 லட்சம் பேர் சென்னையில் வசிக்கின்றனர். இங்குள்ள குறுகலான தெருக்களில் எல்லாம் மக்கள் நெருக்கமாக, ஒரே வீட்டில் ஏழெட்டுப் பேர் வசிக்கின்றனர்.
"இதன் காரணமாகவே கிருமிப் பரவலும் ஒரு கட்டுக்குள் வராமல் நாளும் அதிகரித்து வருகிறது.
"ஆறு அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பலர் இந்த கொரோனா கிருமித் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
"வளரும் நாடுகள், வளர்ச்சி அடைந்த நாடுகளில் எல்லாம்கூட இக்கிருமியைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் உள்ள நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.
"கொரோனா தாக்கம் முழுவதும் குறைந்த பின்னரே பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்," என்று கூறினார்.
இதற்கிடையே, "பொது சுகாதாரப் பழக்கவழக்கங்களை நடை முறைக்குக் கொண்டு வராவிடில் கிருமிப் பரவலைத் தடுப்பதற்கு வழியில்லை," என மருத்துவ நிபு ணர் பிரதீப் கவுர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

