கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற மருத்துவர் 2 ரூபாய் செலவில் கொரோனா மருந்தைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த மருந்து பொதுமக்களுக்கு வழங்குவது ஏற்புடையதா? இல்லையா? என்பது குறித்து பரிசீலித்து, விரைவாக ஒரு பதிலை சொல்லவேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"தான் கண்டுபிடித்துள்ள மருந்து குறித்தான ஆய்வு அறிக்கையை மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கவேண்டும்.
"இந்த ஆய்வு அறிக்கையை பரிசீலித்து மருத்துவ மன்றமும் மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்கவேண்டும்," என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
வசந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கொரோனா கிருமித் தொற்றை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்துள்ளேன்.
"இதுகுறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்துக்கு அனுப்பி உள்ளேன். ஆனால், இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. எனது மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி மத்திய அரசுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்துக்கும் உத்தரவிட வேண்டும்," என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று காணொளிக் காட்சி மூலம் விசாரித்தனர்.
அப்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், "மனுதாரர் கண்டுபிடித்துள்ள 'பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்' மருந்து, 'சார்ஸ்', கொரோனா கிருமித் தொற்றை உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும். இந்த மருந்தின் விலை 2 ரூபாய்க்கும் குறைவானதுதான். இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி காய்ச்சலாக மாறாமல் தடுக்கும். இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும்," என்று வாதிட்டார்.

