திருட வந்த இடத்தில் வாய்க்கு ருசியாக மீன் குழம்பு சாப்பிட்ட கொள்ளையர்கள்

திருட வந்த இடத்தில் வாய்க்கு ருசியாக மீன் குழம்பு சாப்பிட்ட கொள்ளையர்கள்

2 mins read
063d9a30-b554-4927-9fc1-cbb204ba142e
ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் நகை, பணம் எதுவும் சிக்காததை அடுத்து ஏமாற்றத்துடன் சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்துள்ளனர். அங்கு மணக்க மணக்க ஒரு மண் சட்டியில் மீன் குழம்பு இருந்துள்ளது. அதையும் மற்றொரு பாத்திரத்தில் இருந்த சோற்றையும் எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்குச் சென்ற கொள்ளையர்கள், அங்கு ஆற அமர உட்கார்ந்து மீன் குழம்பை ஒரு கை பார்த்துள்ளனர். படம்: ஊடகம் -

பத்மநாபபுரம்: தாங்கள் கைவரிசை காட்டவந்த வீட்டில் தங்களது ஆசைப்படி நகை, பணம் எதுவும் சிக்காததால், மீன் குழம்பைச் சாப்பிட்டு பசியைப் போக்கிச் சென்ற கொள்ளையர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம், பத்மநாபபுரம், பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த 40 வயது ஆடவர் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டின் கொல்லைப்புற சமையலறை கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர் திருடர்கள். அப்போது விடிகாலை நேரம் என்பதால் கணவனும் மனைவியும் அயர்ந்து தூங்கியுள்ளனர்.

வீடு எங்கும் நகை, பணத்தை தேடிய கொள்ளையர்கள், எதுவும் கையில் சிக்காததை அடுத்து ஏமாற்றத்துடன் சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்துள்ளனர்.

அங்கு மணக்க மணக்க ஒரு மண் சட்டியில் மீன் குழம்பு இருந்துள்ளது. அதையும் மற்றொரு பாத்திரத்தில் இருந்த சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்குச் சென்ற கொள்ளையர்கள், அங்கு ஆற அமர உட்கார்ந்து மீன் குழம்பை ஒரு கை பார்த்துள்ள னர். வயிறு நிறைந்தவுடன் பானைகளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டியுள்ளனர்.

காலையில் தம்பதிகள் எழுந்து பார்த்தபோது சமையலறை கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த நகை, பணம் எதுவும் திருடப்படவில்லை. மாறாக சமையலறையில் இருந்த சாப்பாட்டு பாத்திரத்தைக் காணாமல் தேடியபோது பக்கத்து வீட்டு மாடியில் கிடந்தது. அதன்பிறகே நிம்மதி அடைந்தனர்.

திருட வந்த இடத்தில் மீன் குழம்பை ருசித்துச் சாப்பிட்டுச் சென்ற கொள்ளையர்கள் பற்றியே அப்பகுதி மக்கள் நகைச்சுவையுடன் கதை கதையாகப் பேசி வருகின்றனர்.