சென்னை: தமிழகத்தின் தலை நகரான சென்னையில் கொரோனா கிருமியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் சென்னையில் மட்டும் 10,000 பேர் வரை கிருமித் தொற்றால் பாதிக்கப்படலாம் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துஉள்ளனர்.
இது குறித்து பேசிய நிபுணர்கள், "சென்னையில் அடுத்து வரும் நாட்களில் தொற்று இரட்டிப்பாகும் சூழலில் ஒரே வாரத்தில் மட்டும் 10,000 பேர் வரை பாதிக்கப்படலாம். இனி வரும் நாட்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது அவசியம்," என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த பத்து நாட்களில் மட்டும் 10,500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், அடையார், வளசரவாக்கம் ஆகிய 8 மண்டலங்களில் புதிய கிருமித் தொற்று அதிகம் கண்டறியப்பட்டுஉள்ளது.
ராயபுரம் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 140க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரு வதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4,600ஐ நெருங்குகிறது. இந்த மண்டலத்தில் மட்டும் 96 தெருக்கள் முழுமையாக முடக்கப் பட்டுள்ளன.
இதே போன்று கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 தெருக்களும் திரு.வி.க. நகர் மண்டலத்தில் 54 தெருக்களும் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 360 தெருக்கள் சென்னையில் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் அத்தியா வசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

