சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றைக் கண்டறிய அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தொற்று அதிகமுள்ள மராட்டிய மாநிலத்தை விட தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
அதிகளவில் சோதனை நடத்தப்படுவதால்தான் அதிகமான பாதிப்புகளைக் கண்டறிய முடிவதாகவும் அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் இரண்டாயிரம் தாதியர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இப்புதிய தாதியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றார்.
"சென்னையில் தாதியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது. மாநகரில் கொவிட்-19 சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அரசு இயந்திரம் இரவு, பகல் பாராமல், ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது," என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இதற்கிடையே, சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் தற்போது 5,210 தெருக்களில் மட்டுமே கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளரும் மருத்துவருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் அடுத்த இரு வாரங்களுக்கு பாதிப்பு இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சித்த மருத்துவ முறையில் சில நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு பக்கம் அலோபதி மருத்துவர்கள், இன்னொரு பக்கம் சித்த மருத்துவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்," என்றார் ராதாகிருஷ்ணன்.
சென்னை சாலிகிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை பெற்று வந்த 130 கொவிட்-19 நோயாளிகளில் இதுவரை 30 பேர் முழுமையாக குணமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"கொவிட்-19 நோயைக் கண்டறிய பரிசோதனை செய்தாலே ஒருவர் தம்மை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் அறிவுறுத்தல் நோய் பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை.
"ஒருவர் பரிசோதனை செய்தவுடன் அவர் முடிவு வரும் வரை வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். அதேபோல் பரிசோதனை முடிவில் தொற்று இல்லாமல் அறிகுறி இருந்தாலும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
"மக்களின் ஒத்துழைப்புடன் தான் கொரோனா கிருமி ஒழிப்பில் வெற்றி பெற முடியும்," என்றும் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

