சென்னை: தமிழகத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான உகந்த சூழல்களைப் பட்டியலிட்டு அவர் உலகின் ஐந்து முன்னணி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக்கி, அடிடாஸ் ஏஜி, மேட்டல் இங்க் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்கு முதல்வரின் கடிதம் சென்றுள்ளது. இந்த ஐந்து நிறுவனங்களும் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகின் தலைசிறந்த நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன.
அண்மைய சில மாதங்களாக தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பல்வேறு நாடுகளின் தூதர்களைச் சந்திப்பது, முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புப் பணிக்குழுவை அமைப்பது என முதல்வர் பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

