மேலும் ஒரு தமிழ்நாட்டு எம்எல்ஏவுக்கு தொற்று

மேலும் ஒரு தமிழ்நாட்டு எம்எல்ஏவுக்கு தொற்று

2 mins read
2495a590-1980-43d2-906c-aefa76667882
திருப்பெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி. படம்: ஊடகம் -

சென்னை: திருப்பெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தொற்று உறுதியானதும் உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் பழனி எம்எல்ஏ (படம்) அனுமதிக்கப்பட்டுள்ளார். நிவாரணப் பணிகளுக்கு வெளியே சென்றபோது யாரிடமிருந்தாவது அவருக்குக் கிருமி பரவி இருக்கலாம் எனத் தெரிகிறது.

இருப்பினும், ஏற்கெனவே திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்த நிலையில் இப்போது இந்த எம்எல்ஏவும் கொரோனா கிருமியால் தாக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கிருமித்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 40,000ஐ கடந்துவிட்டது.

வெள்ளிக்கிழமை இரவு தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில் அன்று மட்டும் 1,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவர்களில் 49 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மொத்த பாதிப்பு 40,698 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 78 பரிசோதனை மையங்கள் மூலமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 18,231 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 6,73,906 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. உயிரிழப்புகளைப் பொறுத்தமட்டில் சென்னையில் 15 பேரும் செங்கல்பட்டில் 2 பேரும் திருவள்ளூரில் ஒருவரும் என 18 பேர் பட்டியலிடப்பட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த மரண எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது.

18 பேரில் 10 பேர் அரசு மருத்துவமனையிலும் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 22,047ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,097 பேரும் 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 34,042 பேரும் 60 வயதை கடந்தவர்கள் 4,559 பேரும் உள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், கொரோனா கிருமிப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது.