சென்னை: புழல் சிறையில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 22 கைதிகள் சித்த மருத்துவ சிகிச்சையால் ஐந்து நாட்களில் முழுமையாக குணமடைந்ததாக இந்து நாளிதழ் தெரிவித்து உள்ளது.
"புழல் மத்திய சிறையில் 30 கைதிகள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில், ஆறு பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 24 பேர் சிறையில் உள்ள வார்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சித்தா மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
"இதையடுத்து, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், சிறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகளைக் கொடுத்தனர்.
"ஐந்து நாள் சிகிச்சையில் 22 பேர் முழுமையாகக் குணமடைந்தனர். இருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

