ஈரோடு: தமிழ்நாட்டைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர், தனக்கு மனைவியாகத் தன் பெற்றோர்கள் பார்த்திருந்த ஒரு பெண்ணை நேரே பார்த்து பேசி பலவற்றையும் முடிவுசெய்ய வேண்டும் என்று விரும்பினார்.
ஈரோடு நகரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த அந்த 35 வயது ஆடவர், அதற்காக தூத்துக்குடி செல்ல திட்டமிட்டார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனுமதி வாங்கிதான் அவர் தூத்துக்குடி செல்ல வேண்டும் என்ற நிலை இருப்பதால், அதற்காக அவர், கறுப்பநாயக்கன் பாளையம் என்ற ஊரில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தை நாடினார். அந்த நிறுவனம் மூலம் மூன்று முறை மனு செய்தும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
திருமண அழைப்பிதழ் ஒன்றை இணைத்து மனுச் செய்தால் அனுமதி கிடைத்துவிடும் என்று அந்தக் கணினி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஆலோசனை கூறியதை அடுத்து அதற்கு அந்த ஆடவர் இணங்கினார்.
போலி திருமண அழைப்பிதழுடன் விண்ணப்பம் செய்யப்பட்டது. திருமணம் சென்னையில் நடக்க இருப்பதாக அந்த அழைப்பிதழ் தெரிவித்தது.
இந்த நிலையில், திருமண அழைப்பிதழையும் விண்ணப்பத்தையும் சரிபார்த்த தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர், ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் செய்துள்ள மனுவில் சென்னையில் நடக்கும் திருமணத்திற்குத் தூத்துக்குடி செல்ல அனுமதி கேட்டுஇருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்தார்.
பிறகு விசாரணையில் போலி அழைப்பிதழுடன் அந்த வாகன ஓட்டுநர் விண்ணப்பித்து இருந்தது தெரியவந்தது. அந்த ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
போலியான திருமண அழைப்பிதழ் இணைக்கப்பட்டு இருந்தது தனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாக அதிகாரியிடம் அவர் விளக்கம் அளித்தார். இருந்தாலும் தூத்துக்குடி போக அவருக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

