தமிழகத்தில் கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி ஆலோசனை

3 mins read
8b225b37-39bf-4832-9217-a87469bb0bcd
: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுப்பது குறித்து மருத்துவ ஆய்வுக்குழுவினருடன் அம்மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடனும் அமைச்சர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நிலைமை மோசமடைந்திருப்பதால் தமிழகத்தில் கூடுதலாக கொரோனா கிருமித்தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து, கொரோனா கிருமித்தொற்றால் மேலும் அதிகமானோர் பாதிப்படைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இக்கொடிய நோயின் காரணமாக தமிழகத்தில் மாண்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தின நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 30 பேரின் உயிரை கொரோனா பறித்து உள்ளது. இதன் மூலம் பலியானவர்கள் எண்ணிக்கை 397ஆக அதிகரித்து உள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது.

"தமிழக மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 23,409ஆக உயர்ந்துள்ளது," என்று அது கூறியது.

சென்னையில் 26 பேர் உயிரிழப்பு

சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 30 பேர் உயிரிழந்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த 27 வயது இளைஞர், 27 வயது இளம்பெண் உட்பட 26 பேரும் விழுப்புரத்தில் 29 வயது இளைஞரும் தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் அடங்குவர். இதைஅடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 397ஆக அதிகரித்து உள்ளது.

17,911 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் தமிழகத்தில் மட்டும் 1,956 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதில் 1,183 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள் ஆவர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த 13 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 19 பேர் என 32 பேருக்கும் தொற்று உறுதியானது.

தமிழகத்தில் இதுவரை 691,817 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் 26,350 ஆண்களும் 16,320 பெண்களும் திருநங்கைகள் 17 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 2,194 குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட

4,813 முதியவர்களும் அடங்குவர். நேற்று முன்தினம் மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 97 குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட 254 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 30,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தமிழகத்தில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு உள்ள பட்டியலில் 28 மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. அதன்படி சென்னையில் 1,487 பேரும் செங்கல்பட்டில் 136 பேரும் திருவள்ளூரில் 78 பேரும் திருவண்ணாமலையில் 50 பேரும் தூத்துக்குடியில் 30 பேரும் காஞ்சிபுரத்தில் 22 பேரும் நெல்லையில் 18 பேரும் திருவாரூர், மதுரையில் தலா 15 பேரும் விழுப்புரம், வேலூர், சிவகங்கையில் தலா 13 பேரும் கடலூரில் 12 பேரும் கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரியில் தலா 11 பேரும் தஞ்சாவூரில் 10 பேரும் திண்டுக்கலில் 11 பேரும் திருச்சியில் 6 பேரும் கரூர், சேலத்தில் தலா 5 பேரும் தென்காசியில் 3 பேரும் விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம், தர்மபுரியில் தலா 2 பேரும் அரியலூரில் ஒருவரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்ட 1,487 பேரால் பாதிப்பு எண்ணிக்கை 30,000 தாண்டியது. சென்னையில் இதுவரை 30,444 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இவர்களில் 14,180 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15,947 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 316 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.