அரசு அலுவலகங்களை சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி உத்தரவு

அரசு அலுவலகங்களை சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி உத்தரவு

2 mins read
442909be-4f4e-4ab5-af39-746e85bc88f2
சென்னையில் உள்ள அரசு அலுவலகத்தில் தெளிக்கப்படும் கிருமி நாசினி. படம்: ஏஎஃப்பி -

கடலூர்: தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 18ஆம் தேதியிலிருந்து 50 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

வாரத்திற்கு ஆறு நாட்கள் பணி நாட்களாகக் கொண்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் முழு அளவிலான சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அலுவலகம் இயங்காமல் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையிலும் அரசு அலுவலகங்களைச் சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டது.

இதன்படி இம்மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமையான நேற்று முன்தினம் கடலூரில் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு அருங்காட்சியகம், கருவூலம், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம், வணிக வரித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் நேற்று முன்தினம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

மேலும் பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தும் பணியும் நடந்தது. இதை நகராட்சி ஆணையாளரும், முக்கிய அதிகாரிகளும் கண்காணித்தனர்.

நேற்று முன்தினம் கோயம்புத்தூரிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம் உள்பட ஏராளமான அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலகங்களில் அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. குறிப்பாக கதவு, சன்னல்கள், கைப்பிடிகள், மின்தூக்கிகள், தரைப்பகுதி, படிக்கட்டுகள், இருக்கைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 10 பேர் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் நேற்று முன்தினம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.