சென்னையில் ஒரே நாளில் 55 போலிசாருக்குக் கிருமித்தொற்று

சென்னையில் ஒரே நாளில் 55 போலிசாருக்குக் கிருமித்தொற்று

1 mins read
b5fcdb3c-1c9b-48f8-9dfc-d432c71fd3d6
கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் சென்னை போலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை போலிஸ் அதிகாரிகளில் ஏற்கெனவே 582 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். படம்: ஏஎப்பி -

சென்னை: நேற்று முன்தினம் ஒரே நாளில் சென்னையைச் சேர்ந்த 55 போலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அரும்பாக்கம் போலிஸ் நிலையத்தில் போலிஸ் ஆய்வாளர்கள் இருவர் உட்பட 7 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் சென்னை போலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை போலிஸ் அதிகாரிகளில் ஏற்கெனவே 582 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் புதிதாக 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 637ஆக உயர்ந்துள்ளது.

சென்னை போலிஸ் படையைச் சேர்ந்த துணைக் கண்காணிப்பாளர் ஒருவரும் பெண் போலிஸ் ஆய்வாளர்களும் இருவரும் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

போலிஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் பெண் ஆய்வாளர் ஒருவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதியானது. போலிஸ் ஆய்வாளராக இருக்கும் அவரது கணவர் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரும்பாக்கம் போலிஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளருக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கும் ஐந்து போலிஸ் ஆய்வாளர்களுக்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது.

அரும்பாக்கம் போலிஸ் நிலையம் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் இருவரின் அறைகளும் பூட்டப்பட்டன. முழுமையாக குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ள சென்னை போலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 236 ஆக உயர்ந்துள்ளது.