திருச்சி: தடை செய்யப்பட்ட காட்டுப்பகுதியில் வேட்டையாடிய இளையரையும் அவர் கொன்ற விலங்குகளை சமைத்துக் கொடுத்த அவரது தாயையும் திருச்சி போலிசார் கைது செய்துள்ளனர்.
பாடாலூரைச் சேர்ந்த 30 வயதான பிரபு என்ற ஆடவர், நெடுங்கூர் வனப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தன் நண்பர்களுடன் காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளார்.
காட்டுப்பன்றி, முயல், நரி ஆகியவற்றை வேட்டையாடிக் கொன்றபின் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் பிரபு. அதன் பின்னர் அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது தாய் லட்சுமி அந்த விலங்குகளை சமைத்துக் கொடுத்துள்ளார்.
லட்சுமி உள்ளூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பிரபு பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார்.
நேற்று முன்தினம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த பிரபுவை வனத்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் சில ஆண்டுகளாகவே வன விலங்குகளை வேட்டையாடி வந்தது அம்பலமானது.
இதையடுத்து அவரது வீட்டில் போலிசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வன உயிரினங்களை வேட்டையாடியது தொடர்பான ஏராளமான படங்களும் காணொளிப் பதிவுகளும் காணப்பட்டன.
மேலும் பாகிஸ்தானில் உள்ள வேட்டையாடுவோர் சங்கத்துடனும் பிரபு தொடர்பில் இருப்பது தெரியவந்தது. பாகிஸ்தானியர்களுடன் வேட்டையாடுவது தொடர்பான தகவல்களை மட்டுமே தாம் பகிர்ந்துகொண்டதாக பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் வேறு காரணங்களுக்காக அவர் பாகிஸ்தான் தரப்புடன் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
மேலும் பிரபுவுக்கு வேட்டையாடுவதில் உடந்தையாக இருந்த மகாலிங்கம் என்ற 58 வயது முதியவரும் கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, தலைக்கவச விளக்கு ஆகியவற்றைப் போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

