சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தின நிலவரப்படி கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 528ஆக பதிவாகியுள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருகிறது. மாண்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 49 பேர் கிருமித்தொற்று காரணமாக மாண்டனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 500ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் கிருமித்தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 48,000ஐ கடந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை நேற்று முன் தினம் அறிக்கை வெளியிட்டது.
நேற்று 942 ஆண்கள், 573 பெண்கள் என 1,515 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் வெளிநாட்டிலிருந்து வந்த இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேரும் உள்ளனர்.
"இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,438 பேர் நேற்று முழுமையாகக் குணம் அடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,782ஆக உயர்ந்துள்ளது.
"தமிழக மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 20,706 பேர் கொரோனா கிருமித்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் 40 பேர் பலி
தமிழகத்தில் நேற்று முன்தினம் 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அவர்களில் 35 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 14 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். உயிரிழந்தவர்களில் 46 பேருக்கு கொரோனாவுடன் மற்ற பாதிப்புகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் பட்டியலில் சென்னையில் 22 வயது இளம்பெண் உட்பட 40 பேரும் திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா 3 பேரும் மதுரை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் தலா ஒருவரும் அடங்குவர். இதையடுத்து சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆகவும் தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 528 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னையில் 919 பேரும் செங்கல்பட்டில் 88 பேரும் ராணிப்பேட்டையில் 76 பேரும் திருவண்ணாமலையில் 65 பேரும் திருவள்ளூரில் 52 பேரும் காஞ்சிபுரத்தில் 47 பேரும் நாகப்பட்டினத்தில் 43 பேரும் மதுரையில் 20 பேரும் ராமநாதபுரம், நெல்லை, விழுப்புரத்தில் தலா 18 பேரும் வேலூரில் 16 பேரும் திருச்சி, திண்டுக்கலில் தலா 14 பேரும் தென்காசியில் 13 பேரும் கடலூரில் 11 பேரும் திருவாரூரில் 10 பேரும் விருதுநகரில் 8 பேரும் கள்ளக்குறிச்சியில் 7 பேரும் கன்னியாகுமரியில் 6 பேரும் சேலத்தில் 5 பேரும் தேனி, தஞ்சாவூர், அரியலூரில் தலா 4 பேரும் நாமக்கலில் 3 பேரும், சிவகங்கை, பெரம்பலூர், தர்மபுரி, கோவையில் தலா 2 பேரும் கரூர், தூத்துக்குடி, திருப்பூரில் தலா ஒருவரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 19,242 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை கூறியது.

