தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது
சென்னை: இன்று முதல் மாத இறுதி வரை சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு காவல்துறைக்கு அரசு தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு தொடர்பான விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றிலும் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து முறையான காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இம்முறை சென்னையில் முழு ஊரடங்கு மிகக் கடுமையாக இருக்கும் என்றும், அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்று சமூகப் பரவலாக மாறுவதைத் தடுக்கவே முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தமிழகத்தில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 576ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது.
மாநிலத்தில் இதுவரை 27,624 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 21,990 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே கிருமித்தொற்று பரவலைத் தடுக்க குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் நிறைந்த பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்களை மக்களைத் தனிமைப்படுத்தும் பகுதிகளாகப் பயன்படுத்தலாம் என தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.

