செய்திக்கொத்து (தமிழ் நாடு) 19-6-2020

செய்திக்கொத்து (தமிழ் நாடு) 19-6-2020

2 mins read
94a2b535-f492-4d86-8f2a-627eedc8e430
-

ஊரடங்குக்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு அபராதம்

சென்னை: ஊரடங்கை ரத்து செய்யக் கோரி இமானுவேல் என்பவர் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளின் விளக்கங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்குத் தொடுத்த இமானுவேலுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இலவசப் பேருந்து சேவை வழங்கும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன்

மயிலாடுதுறை: கொள்ளிடத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் என்பவர் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இலவசப் பேருந்து சேவையை வழங்கி வருகிறார். இவருக்குச் சொந்தமான பேருந்து கடந்த 17ம் தேதியில் இருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. "நாள்தோறும் பேருந்தை இயக்க 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. சுதந்திரப் போராட்டத் தியாகியான எனது தந்தை மக்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று சொல்லியே எங்களை வளர்த்தார். அந்த வகையில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்," என்கிறார் பிரகாசம்.

வழக்கை திரும்பப் பெற்ற ஆர்.எஸ்.பாரதி

சென்னை: நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடந்ததாக முதல்வர் பழனிசாமி மீது திமுக தலைமை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் ஒப்பந்தப்புள்ளியே கோரப்படவில்லை என்றும் பிறகு எப்படி ஊழல் நடந்திருக்க முடியும் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதே கேள்வியை குற்றம்சாட்டிய ஆர்.எஸ்.பாரதி தரப்பிடம் நீதிபதியும் எழுப்பினார். இதையடுத்து அவர் தமது மனுவை திரும்பப் பெற்றார்.

பல கோடி ரூபாய்க்கு மது விற்பனை

சென்னை: இன்று முதல் மாத இறுதி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நேற்று சென்னையில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அடுத்த 12 நாட்களுக்கு மதுக்கடை கள் மூடப்பட்டிருக்கும் என்பதால் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கிக் குவிக்க மதுப்பிரியர்கள் திரண்டனர். இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள மதுப்புட்டிகள் விற்றுத் தீர்ந்தன.