தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் நான்கு மாவட்டங்களில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரையிலும் கொரோனா தொற்று அசுர வேகம் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 18 நாட்களில் மட்டும் 250 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; ஐவர் பலியாகி உள்ளனர்.
மதுரையில் அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயது ஆடவர் மார்ச் 23ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். கொரோனா தொற்றால் மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட முதல் நபர் அவர். தொற்று கண்ட இரு நாட்களில் அவர் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் நபரும் அவரே.
படிப்படியாக மதுரையில் அதிகரித்து வந்த கிருமித்தொற்று எண்ணிக்கை ஏப்ரல் மாத இறுதியில் 79ஆகவும் மே மாத இறுதியில் 269ஆகவும் இருந்தது. மே மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் என்று கூறப்பட்டது. சென்னையில் இருந்து மதுரைக்கு படையெடுப்பவர்களாலும் பாதிப்பு உயர்ந்தது.
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே மதுரை மாவட்டத்தில் கொரோனா கிருமித்தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 20க்கு மேற்பட்டோர் பாதிப்பு பட்டியலில் சேர்ந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஐவர் ஜூன் மாதத்தில் உயிரிழந்தவர்கள்.
இதுவரை 8 பேர் இறந்துள்ளனர். இம்மாத பலி மட்டும் ஐந்து. 18 நாளில் 250 பேரை கொரோனா தாக்கியுள்ளது. தற்போது பரவை, மாட்டுத்தாவணி காய்கறி, பழ சந்தை ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இரு நாட்களாக பரவை சந்தையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இதுவரை 700 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர்.
பரவை சந்தையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அதனை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாட்டுத்தாவணி பழ சந்தையிலும் கொரோனா பாதிப்பு தென்பட்டதால் அதனையும் நான்கு நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 495 ஆக உள்ளது; அவர்களில் மதுரை மாநகருக்குள் பாதிப்பு கண்டவரகள் 311 பேர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

