தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்று அன்றாடம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புற நகரங்களிலும் நிலைமை அபாய கட்டத்தை எட்டியுள்ளது. அதனைத் தடுக்கும் முயற்சியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான முடக்கம் அறிவிக்கப்பட்டது.
முடக்கம் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தியாகராயநகர் உஸ்மான் சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட சென்னை பெருநகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
அதனால் கடுமையான முடக்கம் நடப்புக்கு வந்தது முதல் கடந்த இரு நாட்களாக இந்தச் சாலைகள் போக்குவரத்து இன்றி பாலைவனம்போல காணப்படுகின்றன. அவசரத் தேவைகளுக்காக 'பாஸ்' வைத்திருப்போரின் வாகனங்களும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் ஒன்றிரண்டு சாலைகளில் காணப்பட்டன.
வெள்ளிக்கிழமை நடப்புக்கு வந்த முடக்கம் இம்மாதம் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகருக்குள் 288 இடங்களிலும் புறநகர் களில் 112 பகுதிகளிலும் போலிஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
சாலைகளில் வாகனப் போக்குவரத்தை தடுத்து நிறுத்தும் பணியில் 18,000 போலிசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை நகரின் மூலை முடுக்கில் எல்லாம் போலிசார் நிறுத்தப்பட்டு மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். அத்தியாவசியத் தேவை தவிர காரணமின்றி நடமாடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
வீட்டுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவரவரின் இருப்பிடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் நடந்து செல்ல வேண்டும் என போலிசார் திருப்பி அனுப்பி வருகிறார்கள். கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கிறார்கள்.
மேலும் பலர் சென்னையை விட்டு வெளியேறி வேறு மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

