சென்னை: சென்னையில் இருந்து வருபவர்களை ஊருக்குள் அனுமதிக்கக் கூடாது என பிற மாவட்டங்களில் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
"சென்னையில் கொரோனா கிருமி அதிகமாக பரவியுள்ளதால் கிராமப் பொதுமக்கள் அனைவரும் சென்னையில் இருந்து வருபவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது ஆட்சியாளர் உத்தரவு," என்று தண்டோரா போடுபவர் அறிவிப்பது காணொளியில் பதிவாகி உள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம், செய்யூர் போன்ற பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் தண்டோரா போடப்பட்டு வருகிறது.
ஆனால் இச்செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அதிலும் சென்னை வாசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், "ெசன்னையிலிருந்து வருபவர்களை ஊருக்குள் விடக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.
"இவர்கள் என்ன வெளிநாட்டுக்கா போகிறார்கள்? தமிழ்நாட்டிற்குள் உள்ள ஓர் இடத்துக்குத் தானே செல்கிறார்கள்.
"இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். கொரோனா கிருமியால் எழுந்திருக்கும் புதுவிதமான பிரச்சினையாக இது கருதப்படுகிறது.

