தென்னிந்திய திரைப்பட நாயகர்கள் சிலர் கொரோனா கிருமியை விரட்டுவதைக் காட்டும் உயிரோவிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இணையவாசி 24 வயதான கதிர் குமரன் என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்த காணொளியில் ரஜினிகாந்த், தனுஷ், கார்த்தி உள்ளிட்டோரின் மெய்நிகர் வடிவங்கள் இடம்பெறுகின்றன. இந்நடிகர்கள் தங்களுக்குரிய தனித்தன்மையான வசனங்களைப் பேசி பூதங்களாக உருவகப்படுத்தப்பட்ட கிருமிகளைச் சுட்டு வீழ்த்துவதைக் காண்பிக்கும் இக்காணொளி, 'கிரண்ட் தெப்ட் ஆட்டோ' (Grand Theft Auto) 'கவுண்டர்ஸ்டிரைக்' (Counterstrike) போன்ற கணினி விளையாட்டுகளை பார்ப்பவர்களுக்கு நினைவூட்டலாம்.
இதனை ஒரு மாதத்திற்குக் குறைவான நேரத்தில் தயாரித்திருப்பதாகக் கூறினார் திரு கதிர் குமரன். இதற்கு முன்னதாக நடிகர் தனுஷ்ஷின் மாதிரி உருவத்தைக் கொண்டுள்ள உயிரோவியக் காணொளியைத் தயாரித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

