மதுரை: கொரோனா கிருமித்தொற்றை குணப்படுத்துவதற்கான மருந்தை தாம் கண்டுபிடித்துள்ளதாக சித்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அரசு இம்மருந்தை ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையை அணுகியுள்ளார்.
எஸ்.சுப்பிரமணியன் என்ற அந்த சித்த மருத்துவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 66 மூலிகைகளைக் கொண்டு தாம் புதிய மருந்து கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மருந்தை தினமும் கொதிக்க வைத்து 2 வேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் பக்கவிளைவுகள் ஏதும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தமது மருந்தை மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய உத்தரவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து எஸ்.சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள மருந்தை ஜூன் 26ஆம் தேதி சென்னையில் உள்ள மருத்துவக் கழகத்தின் ஹோமியோபதி இயக்குநரிடம் அளித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

