தூத்துக்குடி: ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத் திருந்ததாகக் கூறி தந்தை-மகன் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்ற போலிசார், அவர்களைச் சிறைக்குள் வைத்து அடித்துத் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்ப வத்துக்கு கண்டனம் ெதரிவித்தும் நீதி கேட்டும் தமிழகம் எங்கும் உள்ள வணிகர்கள் நேற்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் பொதுமக்களும் வியாபாரிகளும் போலிசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்க மிட்டனர்.
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், 58, அவரது மகன் பெனிக்ஸ், 31, ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
இதையடுத்து, தந்தை-மகன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்திருந்தார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, தந்தை-மகன் மரணத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு போலிஸ் அதிகாரி களையும் இடைநீக்கம் செய்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சாத்தான்குளம் போலிஸ் நிலைய போலிசாரை கூண்டோடு மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை- மகன் இறந்த சம்பவத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தந்தை-மகனைப் போலிசார் கைது செய்து தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழப்பிற்கு காரணமான போலிசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

