வீர மரணம் அடைந்த பழனிக்கு ரூ.20 லட்சம் வழங்கிய தமிழக ஆளுநர்
ராமநாதபுரம்: சீனாவின் தாக்குதலால் லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரர் பழனியின்(40) குடும்பத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது சிறப்பு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் அஜய் ரத்தோர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழனியின் வீட்டிற்கு நேரில் சென்று பழனியின் மனைவி வானதிதேவியிடம் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
அவசர சிகிச்சை வாகனத்தில் சொந்த ஊர் திரும்பிய 7 பேர்
சென்னை: திருவேற்காட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டம், கொரட்டூர் கிராமத்துக்கு அவசர சிகிச்சை வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்ற ஏழு பேர் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் பிடிபட்டனர். ஓட்டுநரைக் கைது செய்த போலிசார், அவசர சிகிச்சை வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
'சைரன்' ஒலியுடன் வேகமாக வந்த அவசர சிகிச்சை வாகனத்தை தடுத்து நிறுத்திய போலிசார், அதில் சோதனையிட்டபோது 'இ-பாஸ்' அனுமதியின்றி தப்பிச்செல்ல முயன்ற ஏழு பேரை பிடித்துத் தனிமைப்படுத்தினர்.
பயணச் சீட்டை தொடாமல் சோதனை
மதுரை: கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் விதத்தில் ரயில் பயணச்சீட்டுகளைத் தொடாமல் பரிசோ தனை செய்யும் வசதி மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.
பயணிகளின் அடையாள அட்டைகளை பயணச்சீட்டு பரிசோதகர்கள் தொட்டு பரிசோதிப்பதன் மூலம் கிருமி பரவும் வாய்ப்புள்ளதால் அதைத் தவிர்க்க பயண ரசீது வழங்கும் இடங்களில் 'வெப் கேமரா'வுடன் கூடிய கணினியை நிறுவியுள்ளனர். பயணச்சீட்டு, அடையாள அட்டைகளை அதில் காண்பித்தவுடன் மறுபக்கம் உள்ள பயணச்சீட்டு பரிசோதகர் கணினித் திரையில் தெரியும் விவரங்களை சரிபார்த்து பயணிகளை அனுமதிக்கின்றார்.
பேருந்து நடத்துநர்களிடம் விசிலுக்கு பதில் மணி
சென்னை: கொரோனா தொற்றைத் தவிர்க்கும் வகையில் விழுப்புரம் அரசுப் பேருந்துகளின் நடத்துநர்களுக்கு விசிலுக்கு மாற்றாக அழைப்பு மணி வழங்கப்பட்டுள்ளது.
"விசில் மூலம் ஓட்டுநரிடம் தகவல் கொடுக்க விரும்பும் நடத்துநர்கள் ஒவ்வொரு முறையும் முகக்கவசத்தை கழற்ற வேண்டியது உள்ளது. இது கிருமிப் பரவலை அதிகப்படுத்த வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதால் அழைப்பு மணியை அறிமுகப்படுத்தி உள்ளோம்" என போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பெண் குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தாய் உட்பட அறுவர் கைது
வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் ஒன்றரை வயது குழந்தையை தாய் ஒருவர் ரூ.50,000க்கு விற்றுள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து குழந்தையின் தாய் உள்பட ஆறு பேரை போலிசார் கைது செய்தனர்.
கணபதி - ரோஸ்லின் தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவியைச் சந்திக்க வந்த கணபதி தனது குழந்தை குறித்து கேட்டபோது, யாரோ சிலர் குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக ரோஸ்லின் கூறியுள்ளார்.

