நாமக்கல்: சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த விவகாரம் தொடர்பில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல், வணிகர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாமக்கல் மாவட்டத்தில் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் ஜெயகுமார் வெள்ளை யன் தெரிவித்தார்.
இதற்கிடையே, போலிசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டு உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, இருவருக்கும் தலா ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஜெயராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறினார்.
வணிகர்களான தந்தை மகன் சிறையில் உயிரிழந்த விவகாரத்தை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கொரோனாவால் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் சூழலில் காவல்துறையினர் இதுபோன்று கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என காவல்துறையினரைக் கண்டித்துள்ளது.

