முதல்வர்: தவறு செய்த போலிஸ் அதிகாரிகளுக்கு கடும் தண்டனை நிச்சயம்

2 mins read
fb57c9ad-52ad-4806-870d-16b3766430f3
சாத்தான்குளத்தில் ஊரடங்கு விசாரணை என்ற பேரில், கடைக்காரர் ஒருவரையும் அவரது மகனையும் கொடுமைப்படுத்தி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள். விசாரணையின்போது, காவல்துறை அதிகாரிகள் விலையுயர்ந்த கைபேசியை இலவசமாகக் கேட்டதாகவும் தெரியவருகிறது. படம்: ஊடகம் -

கோயம்புத்தூர்: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்துக்குச் சென்றிருந்த முதல்வரிடம், தூத்துக்குடியில் நடந்த தந்தை-மகன் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த முதல்வர், "வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் கனிவோடு நடந்துகொள்ளும்படி காவல்துறை உயர் அதிகாரிகளை ஏற்கெனவே கடுமையாக எச்சரித்துள்ளோம். அதையும் மீறி தவறு இழைத்தவர்களுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும்," என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 58, அவரது மகன் பெனிக்ஸ், 31, கடந்த 20ஆம் தேதி ஊரடங்கு விதியை மீறி கடையைத் திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

விசாரணையின்போது, காவல்துறை அதிகாரிகள் விலையுயர்ந்த கைபேசியை இலவசமாகக் கேட்டதாகவும் தெரியவருகிறது. காவல் நிலையத்தில் மகன் முன்னிலையில் தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்துத் தாக்கியுள்ளனர். பெனிக்ஸை கட்டி வைத்து அடித்ததாகவும் எல்லாவற்றையும் தாண்டி அவரது பின்புறத்தை லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இப்படி கொடுமைப்படுத்தியுள்ள காவலர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறப்புக்குக் காரணமாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

தந்தை-மகனின் குடும்பத்தினரிடம் அவர்களின் திடீர் இழப்புக்காக முதல்வர் பழனிசாமி தலா ரூ.10 லட்சமும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சமும் உதவி நிதியாக வழங்கி உள்ளனர்.

தந்தை-மகனின் குடும்பத்தினரும் உறவினர்களும் ஊர் மக்களும் இந்த இரட்டைக் கொலையைக் கண்டித்து நேற்றும் போராட்டம் நடத்தினர்.