தமிழகத்தில் கிருமிப் பரவல் கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் தகவல்

தமிழகத்தில் கிருமிப் பரவல் கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் தகவல்

1 mins read
9b6b6130-e585-4e25-8c33-6f0173d5aa70
இந்தியாவில் பல துறைகளிலும் பெரும் சாதனைகளுடன் முதல் மாநிலமாகத் திகழும் தமிழகத்தை ஆசியாவிலேயே தொழில் நடத்த தலைசிறந்த இடமாக ஆக்குவதற்கு இடைவிடா முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.  படம்: ஊடகம் -

தமிழகத்திலும் கிருமித்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக வியாழக்கிழமை ஒரே நாளில் 3,509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 70,977ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை முதன்முறையாக 3,000ஐ தாண்டியதுடன் பல மாவட்டங்களில் கிருமிப் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 47,650 ஆகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொவிட்-19 கட்டுக்குள் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"வல்லரசு நாடுகளில்கூட கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க முடியாத சூழலில் தமிழகத்தில் கடுமையான முயற்சி களை மேற்கொண்டு பரவலை கட்டுக்குள் வைத்திருக்கிறோம்," என அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் தற்போது நடப்பில் உள்ள 5ஆம் கட்ட பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து வரும் திங்கட்கிழமை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.