தமிழகத்தில் சோதனையை அதிகரிக்க பரிந்துரை

கிருமி ஒழிப்பில் இந்தியா தீவிரம்

இந்தியாவில் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் மேற்கொண்டு வந்தபோதிலும் அந்நாட்டில் அக்கிருமியின் கோரத் தாண்டவம் குறைந்தபாடாக இல்லை.

இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது. இதன்மூலம் அங்கு கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 548,318 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 380 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 16,475 ஆகியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும் கிருமி சோதனை அதிகரிக்கப்பட்டிருப்பதாலும்தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது எனக் கூறப்பட்டது.

அதேநேரத்தில், அதிகரித்துள்ள சிகிச்சை, மருத்துவப் பரா மரிப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 58.67 விழுக்காடாக முன்னேற்றம் கண்டிருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,010 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 321,722 பேர் குணமடைந்துள்ளனர். 210,120 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அது கூறியது.

 

தமிழகத்தில் சோதனை அதிகரிப்பு

தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 3,949 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதியானது. இதனோடு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 2,167 பேருக்கு நேற்று தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் 1,782 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 62 பேர் உயிரிழந்ததாகவும் பலியானோர் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், நேற்று 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 47,749 பேர் குணமடைந்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட மொத்தம் 37,331 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கிருமிப் பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை பிறப்பிக்கலாம். ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது எனவும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

அங்கு இன்றுடன் முடியும் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று நேரலையில் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவினர், தமிழகம் முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளதாகக் கூறினர்.

திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். சென்னையில் எடுத்த முன்னெச்சரிக்கைக் காரணமாகவே இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று ஐசிஎம்ஆர் மருத்துவர் பிரதீப் கௌர் கூறினார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது நல்ல அறிகுறியாகும். சென்னையில் தினமும் 10,000 சோதனைகள் செய்யப்படுகின்றன. சோதனைகள் அதிகரித்ததால்தான் பாதிப்பு எண்ணிக்கை உயருகிறது. சோதனைகள் அதிகரிப்பதால் பாதித்தோரை வேகமாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த முடிகிறது என்று அவர்கள் கூறினர்.

 

மகாராஷ்டிராவில் ஊரடங்கு

கிருமித்தொற்றுப் பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் நடப்பில் உள்ள ஊரடங்கை ஜூலை 31 வரை அந்த மாநில அரசு நீட்டித்துள்ளது.

தலைநகர் மும்பையில் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே வாகனப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.