செய்திக்கொத்து (தமிழகம்) 30-6-2020

ஆணையர்: கைதானவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது

சென்னை: குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வருபவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுறுத்தி இருப்பதாகவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

 


 

ஜூலை 1ல் காத்திருப்பு போராட்டம்

சென்னை: தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்துக்கொண்டதை கண்டித்து ஜூலை 1ல் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி சம்பளம் பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் தொழிலாளர்களுக்கு எதிரான இதுபோன்ற விரோதப்போக்கு வேறு எந்த ஒரு துறையிலும் இல்லை என்றும் அந்த கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


 

கிருமித்தொற்றைக் குணப்படுத்த இரு புதிய மருந்துகள் பயன்பாடு

சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதாக குறிப்பிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சமூகத் தொற்று கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிருமித்தொற்றைக் குணப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு இரு புதிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உரிய விதிமுறைகளின்படி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அதனை வழங்குவர் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.


 

தனிமைப்படுத்தப்பட்ட மக்களை கண்காணிக்கும் சிறப்புக்குழுவினர்

மடிப்பாக்கம்: சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக 15,000 மாத ஊதியத்தில் தன்னார்வலர்களை நியமித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ், “சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் இளவயதில் உள்ளோரை அவர்களின் விருப் பத்தின் பேரில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்து கிறோம். சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மருத்துவர்கள், தாதியர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.