10 மாவட்டங்களில் ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ்’ அமைப்புக்கு தடை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கோவில்பட்டி சிறையில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ்’ அமைப்பைச் சேர்ந்த ஐவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதையடுத்து, இந்த அமைப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்து வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ்’ அமைப்புக்கு தடைவிதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களும்  ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ்’ குழுவினரைப்   பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி நகர டிஐஜி ஏனி விஜயா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னி யாகுமரி மாவட்டங்களிலும்  அந்த குழுவுக்கு தடை விதிக்கப்பட்டது.

சுற்றுக்காவல், வாகனச்  சோதனை, கைது போன்ற நட வடிக்கைகளில்  இக்குழுவினரை  காவல்துறையினர் பயன்படுத்த வேண்டாம் என நெல்லை டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறி இக்குழுவினரை  காவல்நிலையத்திற்குள் அனுமதித்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு உதவி செய்யும் பொருட்டு இயங்கி வரும் இந்தக் குழுவினர், தங்களின் வரம்பை மீறும் வகையில் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் போல் அப்பாவி மக்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.