செய்திக்கொத்து (6-7-2020) தமிழ் நாடு

2 mins read
73337acf-c110-4a89-991c-530100c6039d
விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. -

விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்த அழைப்பில், சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனை நடத்தியபோது, வெடிகுண்டு ஏதும் கிடைக்காத நிலையில், அது புரளி என தெரியவந்தது.

இதேேபால், அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விசாரணையில் இந்த மிரட்டலை விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் எனத் தெரியவந்தது.

சரத்குமார் ரூ.5 லட்சம் நிதி உதவி

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வியாபாரி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதி உதவியை வழங்கிய நடிகர் சரத்குமார், "மதுரை நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிபிசிஐடி போலிசாரின் விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டுள்ளது. தவறு செய்த அத்தனை பேரும் தண்டனை பெறுவது அவசியம். இனியும் இப்படி ஒரு சம்பவம் எங்கும் நிகழக்கூடாது. ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு என்றும் ஒரு சகோதரனாக துணை நிற்போம்," என்று கூறினார்.

ஐந்து காவலர்களும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய ஐவரும் பேரூரணி சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

ஆணவக் கொலை செய்வதற்காக பெற்றோர் தேடி வருவதாகப் புகார்

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த விக்னேஷும் வடக்கு கன்னக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுபாவும் காதல் திருமணம் புரிந்துகொண்டனர்.

இந்நிலையில், இந்த திருமணத்தை எதிர்த்து சுபாவின் தந்தை ராஜாக்கமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, நாகர்கோவில் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு சென்ற விக்னேஷும் சுபாவும் மனு அளித்தனர். அதில் ஆணவக் கொலை செய்யும் நோக்கத்தோடு சுபாவின் பெற்றோர்களும் உறவினர்களும் தங்களைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.