சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு விவகாரம்: மேலும் 5 போலிசார் கைது

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையைத் துவங்கியுள்ள நிலையில் மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வணிகர்களான தந்தை, மகன் ஆகிய இருவரை சாத்தான்குளம் பகுதி போலிசார் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிபிஐ இன்று இரு வழக்குகளைப் பதிவு செய்தது.

 சிபிஐ வசம் உரிய கோப்புகளை ஒப்படைக்கும் வரை சிபிசிஐடி போலிசார் விசாரணை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி 'ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ்' அமைப்பின் மீதும் புகார்கள் எழுந்தன. தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு முன்பு தடை  விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று, தமிழகம் முழுவதும் இந்த அமைப்பினருக்குத் தடை விதிக்கப்பட்டது.