தமிழகத்தில் ஒரே நாளில் 4,000 பேர் குணம் அடைந்தனர்; சென்னையில் குறையும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் சுமார் 4,000் கொவிட்-19 நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இத்தகவல் பொதுமக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொவிட்-19 நோயால் சுமார் 1.26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை ஒரே நாளில் 4,231 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது.

மாநிலம் முழுவதும் சுமார் 46 ஆயிரம் பேர் கிருமித் தொற்றில் இருந்து விடுபட சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,765 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு கொவிட்-19 பிடியிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,994 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் கொவிட்-19 நோய்க்காக சிகிச்சை பெறுகின்றனர். பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 73 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பிற மாவட்டங்களை விட சென்னைதான் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் அண்மைய சில தினங்களாக ஒரே நாளில் பதிவாகும் கிருமித் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.